×

தென் சென்னை தொகுதியில் இளைஞர்களுக்காக திறன் மேம்பாடு பயிற்சி மையங்களை உருவாக்குவேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு

சென்னை: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் இளைஞர்களுக்காக மத்திய அரசின் திறன் மேம்பாடு பயிற்சி மையங்கள் பல உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலையும், மாலையும் வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தொகுதி சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் முன்னாள் எம்.பி. மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இன்று காலை பரப்புரை மேற்கொண்டார். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே தொடங்கி ஒவ்வொரு தெருவுக்கும் சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின் போது ஜெயவர்தன் பேசியதாவது: 2014- 2019 வரை நான் எம்பியாக இருந்தபோது தென் சென்னையில் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கினேன். இம்முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும் ஒன்றிய அரசிடம் பேசி மத்திய அரசின் திறன் மேம்பாடு பயிற்சி மையங்கள் பல உருவாக்குவேன். இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post தென் சென்னை தொகுதியில் இளைஞர்களுக்காக திறன் மேம்பாடு பயிற்சி மையங்களை உருவாக்குவேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : South Chennai ,AIADMK ,Jayavardhan ,CHENNAI ,Dr. ,J. Jayavardhan ,Tamil Nadu ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!